Saturday, November 15, 2008

புலிகளை இந்தியா காப்பாற்றாது

கனடாவில் டாக்டர் சுப்பிரமணிய சுவாமி

swamy-1கடந்த 11ம் திகதி செவ்வாய்க்கிழமை கனடா ஸ்காபுரோ நகரில் உள்ள சென்ரானியல் கல்லூரி மாணவர் அரங்கத்தில் கனேடியன் ஜனநாயக தமிழர் கலாச்சார அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்திற்கு ஜனதா கட்சியின் தலைவரும் முன்னாள் இந்திய மத்திய சட்டத்துறை அமைச்சருமான டாக்டர் சுப்பிரமணி சுவாமி அவர்கள் “தெற்கு ஆசியர்களும் புலம் பெயர்வும்” என்ற தலைப்பில் உரையாற்றினார். இவரது உரை இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாக இந்தியாவின் நிலைப்பாட்டையும், ஐக்கிய இலங்கைக்குள் தமிழர்களுக்கு அரசியல் தீர்வையும் வலியுறுத்தியதாக இருந்தது. கிட்டத்தட்ட இரண்டு மணித்தியாலங்கள் தொடர்ந்து உரையாற்றினார். இக்கூட்டத்தில் தமிழ் சிங்கள ஜனநாய சக்திகள் புத்திஜீவிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர். டாக்டர் சுப்பிரமணிய சுவாமி அவர்களின் உரை அனைவரினதும் பாராட்டைப் பெற்றது.

மேலும் அவரது உரையில் இந்தியா ஒருபோதும் பிரிவினைக்கு ஆதரவு அளிக்காது எனவும், இந்தியா இலங்கையின் ஒற்றுமைப்பாட்டை மதிப்பதாகவும் இலங்கை அரசாங்கம் புலிகள் மீது மேற்கொள்ளும் இராணுவ நடவடிக்கையை நிறுத்தச்சொல்லி கேட்காது எனவும், காரணம் புலிகள் இயக்கம் ஒரு பயங்கரவாத இயக்கமாக இருப்பதால் இராணுவரீதியாகத்தான் பயங்கரவாதத்தை ஒழிக்கமுடியும் எனவும் கூறினார். புலிகள் இயக்கம் இனப்பிரச்சனைத்தீர்வுக்கு ஒத்துவரக்கூடியவர்களல்ல எனவும் அவர்கள்தான் இந்த இனப்பிரச்சனைக்கு காரணமானவர்கள் எனவும் கூறினார். அவர்கள் ஒரு போதும் ஒரு ஜனநாயக நிர்வாகத்திற்கு வரமாட்டார்கள் எனவும், புலிகளை ஏகப்பிரதிநிதிகளாக ஏற்றுக்கொள்ளாத தமிழ்த்தலைவர்களான அமிர்தலிங்கம், நீலன் திருச்செல்வம், திரு, திருமதி யோகேஸ்வரன் உட்பட பலர் கொல்லப்பட்டுள்ளனர். புலிகள் பல கட்சி ஜனநாயக முறையை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எனவும் இனப்பிரச்சனைக்கு தீர்வை அவர்களால் காண முடியாது எனவும் அதே நேரத்தில் இலங்னை அரசாங்கம் தமிழர்களுக்கு அரசியல் தீர்வை கட்டாயமாக வழங்க வேண்டி இருக்கிறது எனவும் கூறினார்.

பண்டா- செல்வா ஒப்பந்தம் முதல் கொண்டு இலங்கை - இந்திய ஒப்பந்தம் வரை சிறிலங்கா அரசுகள் நடைமுறைப்படுத்தாமல் முறித்துவிட்டன. இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை ஜெயவர்த்தனா நடைமுறைப்படுத்தாமல் அவரது கட்சியினர் புலிகளுக்கு ஆயுதத்தையும் பணத்தையும் கொடுத்து வடக்குகிழக்கிற்கான தமிழர் மாகாணத்தை செயல்படவிடாமலும் தடுத்தனர். ஆனால் முன்னர் உள்ள தலைவர்களைவிட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முன்மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். கிழக்கு மாகாணத்திற்கு தமிழ் முதல் அமைச்சர் நியமிக்கப்பட்டாலும் அதற்குரிய அதிகாரங்கள் இன்னும் அதிகமாகத் தேவைப்படுகின்றது. கிழக்கு மாகாணம் தனது சொந்த அலுவல்களை கவனிக்ககூடியதாக அதிகாரம் இருக்கவேண்டும். சர்வகட்சி மாநாட்டின் (யுPசுஊ) தீர்வை அமுல்படுத்தும்படி இந்தியா இலங்கை அரசை கேட்டுள்ளது. அத்துடன் 13வது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்துவது நல்லதொரு ஆரம்பமாக அமையும். இவற்றை அமுல்படுத்தாவிட்டால் சிறிலங்கா அரசை தமிழ் மக்கள் நம்ப மாட்டார்கள். மேல் சொன்னவற்றை அமுல்படுத்தினால் புலிகளை தமிழ் மக்களின் ஆதரவுடன் இலகுவில் வெற்றிகொள்ளலாம். சிங்கள மக்கள் இந்த தீர்வுப்பொதியைப்பற்றி பயப்படத் தேவையில்லை. காரணம் மத்திய அரசின் கட்டுப்பாட்டை மீறினால் அந்த சபைகளை கலைத்துவிடும் அதிகாரம் 356 சட்டப்பிரிவின் கீழ் மத்திய அரசிற்கு இருக்கிறது. 1991 ஆம் ஆண்டு சட்ட அமைச்சராக நான் இருந்த போது தமிழ்நாடு அரசை கலைக்க வேண்டி வந்த காரணம் இ;ந்தியாவின் விருப்பத்திற்கு மாறாக முதல் அமைச்சர் கருணாநிதி புலிகளுடன் தொடர்பை ஏற்படுத்தி தகவல்களையும் புலிகளுக்கு வழங்கி வந்தார்.

இந்திய மக்கள் அனைவரும் பிரபாகரனை நீதிக்குமுன் நிறுத்த வேண்டும் என்று விரும்புகிறார்கள். பிரபாகரன் இந்திய மண்ணில் வைத்து எமது இளம் தலைவரான இந்திய பிரதமர் ரஜீவ் காந்தியை படுகொலை செய்தார். அத்துடன் இந்தியாவில் உள்ள பயங்கரவாத இயக்கங்களுக்கு நிதி உதவி செய்துள்ளார். இந்தியாவில் எவரும் புலிகளுக்கு ஆதரவு கொடுக்கமாட்டார்கள். தமிழ் நாட்டிலுள்ள சில கட்சிகள் கூட புலிகளை பகிரங்கமாக ஆதரிப்பதாக சொல்ல மாட்டார்கள். அவர்கள் இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுப்பதாகவே கூறுகிறார்கள். புலம் பெயர் தமிழர்கள் தமிழ் நாட்டு மக்கள் புலிகளை ஆதரிக்கிறார்கள் என்று எண்ணிவிட வேண்டாம். புலிகளுக்கு ஆதரவான சில குழுக்கள் பெரிதாக சத்தம் போடுகிறார்கள் அவ்வளவுதான்.

இலங்கை மேற்கத்தைய நாடுகளுடன் ஒப்பிடக்கூடிய வாழ்க்கைத் தராதரத்தை கொண்டுள்ளது. இந்த யுத்தம் இல்லாவிட்டால் உலகில் முதன்மையான நாடுகளில் ஒன்றாக இலங்கையும் இருக்கும். பல இந்தியர்கள் இலங்கைக்கு வர விரும்புகிறார்கள். காரணம் இராமாயணத்தில் சொல்லப்பட்ட 37 இடங்கள் இலங்கையிலேயே உள்ளது. இலங்கைக்கு உல்லாச பயணம் மேற்கொள்வதற்கு தன்னிடம் பல இந்துக்கள் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள் எனக்கூறி தனது பேச்சை முடித்துக்கொண்டார்.

அடுத்ததாக கேள்வி கேட்க யாரும் விரும்பினால் கேட்கலாம் என டாக்டர் சுவாமி அவர்கள் கூட்டத்திலுள்ளவர்களை பார்த்து கேட்டார். அப்போது ஒருவர் இலங்கையில் இனப்படுகொலை நடக்கிறது அதற்கு என்ன சொல்லுகிறீர்கள் என வினா எழுப்பினார். அதற்கு பதிலளித்த டாக்டர் அவர்கள் இலங்கையில்; இனப்படுகொலை நடக்கிறது என்பதை நான் முற்றாக மறுக்கிறேன் என்றார். அதில் உண்மையில்லை. ஜக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சம்பந்தமான அகராதியிலுள்ள வரைவிலக்கினத்தின்படி இனப்படுகொலை என்பது திட்டமிட்டு படுகொலை செய்வது. இலங்கையில் திட்டமிட்டு தமிழர்கள் படுகொலை செய்யப்படவில்லை. அப்பாவி மக்கள் ஒரு யுத்த சூழலில் கொல்லப்படுவது வழமைதான். காஸ்மீரிலும் அப்பாவி மக்கள் யுத்தத்திற்குள்; அகப்பட்டு கொல்லப்படுகிறார்கள். இப்படியான சம்பவங்களை உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்து தவிர்த்துக்கொள்ளலாம்;. இந்தியாவிலுள்ள இரண்டு பெரிய மனித உரிமை அமைப்புக்களை இலங்கைக்கு சென்று இனப்படுகொலை நடக்கிறதா என்பதை அறிந்து வரும்படி அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் கூறினார்கள் நாங்கள் அங்கு போகத்தேவையில்லை அங்கு திட்டமிட்ட இனப்படு கொலை நடக்கவில்லை என்றார்கள். போர் சூழலில் இப்படியான சில சம்பவங்கள் நடைபெறுகின்றது என பதில் அளித்தார்.

இன்னொருவர் புலி உறுப்பினரான கருணா எப்படி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கமுடியும் என வினாவினார். டாக்டர் பதில் கூறுகையில் புலிகள் இயக்கம் இலங்கை அரசியல் நிர்வாகத்தில் பங்குகொள்ளமாட்டார்கள் ஆனால் அந்த இயக்கத்தில் உள்ளவர்கள் புலிகள் இயக்கம் பிழையான பாதையில் செல்வதால் அதை விட்டு விலகி வருவார்களேயானால் அவர்கள் மன்னிக்கப்பட்டு ஜனநாயக நீரோட்டத்தில் இணைய முடியும். அவர்களுக்கு ஒரு சந்தர்ப்பத்தை கொடுத்து இந்தப்பாதையில் உண்மையாகவே இணைந்துள்ளனரா என்பதை கண்காணிப்பு செய்து அவர்களை மேலும் ஊக்குவிக்க முடியும். ஏன் இந்தியாவில் கூட ஒரு பயங்கரவாத இயக்கத்தலைவர்;, ஒரு அரசியல்கைதி என இருவர் ஜனநாயக பாதைக்கு திரும்பி மாநில முதலமைச்;சர்கள் ஆக உள்ளனர் எனப்பதில் அளித்தார்

இந்தியா பழி வாங்கும் நோக்குடனா இப்போ தமிழருக்கு உதவி செய்ய மறுக்கிறது என்று கேட்டதற்கு. அப்படியல்ல, எந்தவொரு வெளிநாட்டு பயங்கரவாத இயக்கமும் வந்த எம்முடைய மண்ணில் வைத்து இந்திய அரசின் ஒப்பந்தத்தை நிறைவேற்றியதற்காக அந்நாட்டின் தலைவரை கொன்றுவிட்டு தப்பித்துக்கொள்ள முடியாது என்பதில் இந்தியாவும் இந்திய மக்களும் உறுதியாக உள்ளனர் என்றார்.

இன்னொரு கேள்விக்கு பதிலளிக்கையில் இந்தியா இலங்கையில் இருந்து அகதிகள் வருவதை ஏற்றுக்கொள்ளாது. இதனால் எமக்கு பெரிய நெருக்கடி ஏற்படுகின்றது. இலங்கை பிரச்சனையில் தலையிட வேண்டிய தேவை ஏற்படுகின்றது. இலங்கை அரசு அரசியல் தீர்வை அழுல்படுத்தகிறதா என்பதை உன்னிப்பாக அவதானித்துக் கொண்டு வருகிறார்கள். இல்லாவிட்டால் சில அழுத்தங்களை இலங்கை அரசிற்கு கொடுப்போம் என்றார்.

கடைசியாக டாக்டர் சுவாமி; புலம் பெயர் ஜனநாயக சக்திகள் இலங்கையில் உண்மையில் என்ன நடக்கின்றது என்பதை சக புலம் பெயர் தமிழர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். இப்போது புலிகளுக்கு நாட்கள் எண்ணப்பட்டுக்; கொண்டிருக்கின்றன. எந்த ஒரு நாடும் புலிகளை ஆதரிக்கமாட்டார்கள். நோர்வே கூட இப்போ மௌனமாக இருக்கின்றது. வன்னிப்பயணங்கள் இல்லை. பல நாடுகளுக்கு சென்று இருக்கிறேன் குறிப்பாக அமெரிக்கா, சீனா, இஸ்ரேல், பிரிட்டன். இவர்கள் எல்லாம் புலிகளின் பயங்கரவாதத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. புலிகள் வெளிநாட்டு மண்ணில் ஒரு பிரதமரை கொலை செய்த பயங்கரவாதிகள். வெளி நாட்டு மண்ணில் பல பத்திதிரிகையாளர்களை தாக்கியிருக்கிறார்கள். எனவே இவர்களின் செயற்பாடுகளின் மூலமே இவர்கள் பயங்கரவாதிகள் என அம்பலமாகிவிட்டார்கள். எனவே மனித நேயமுள்ள எவரும் தாம் புலிகளை ஆதரிப்பதாக கூறமாடார்கள். புலம் பெயர் ஜனநாயவாதிகள் புலிகளுக்கு எதிராக குரல் கொடுத்து ஏனைய தமிழர்களுக்கும் உண்மை நிலைமையை விளக்கி புலிப்பயங்கரவாதத்தை தோற்கடிக்க வேண்டும் எனக்கூறி விடைபெற்றார்.

இறுதியாக கனேடியன் ஜனநாயக தமிழர் கலாச்சார அமைப்பின் செயலாளர் நன்றியுரை கூறியதுடன் கூட்டம் முடிவடைந்தது.

No comments: